Thursday, 10 September 2015

வண்ணதாசனின் மழைக் கவிதைகள்



மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார் 
சொல்லியிருக்கிறதா 
ஒரு பச்சைப் புழுவைக் காணோம் வெகுநாட்களாக 
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக 
ஒரு வானவில் மீன் கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக 
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை 
நனையக் கூடாது என்று தடுத்து விட்டதாக 
வெளியே வந்து எதையும் பாராமல் 
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக 
இல்லை அல்லவா 
அப்புறம் நீங்க ஏன் மழை குறித்து 
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும் 
வீட்டுக்குள் தேநீர் அருந்திக் கொண்டே 
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
                    *****


கோடை தான் 
வெயில் இல்லை.
மழை 
நீங்கள் பாடுங்கள் 
நான் கேட்கிறேன்.
               *****

வாகை மரத்தடியில் 
நனையாத ஓதுங்கல்.
உருண்டோடிக் கிடந்த 
வேற்று நுங்கு முக்கண்களில் 
விழுந்து நிரம்பித் தெறித்தது மழை.
ஒரே ஒரு சிறுகணம்.
எத்தனை முழுமையாகிவிட்டது 
இந்த உலகனைத்தும்.
                 *****  

சன்னல் தூறலில் நனையும் 
மேஜையை நகர்த்திப் போட்டதும் 
மழை கோபித்துக் கொண்டு 
உரத்த சுருதியில் 
பெய்ய ஆரம்பித்தது.
வேறொருவர் உடையதைப் போல 
முகம் மாறிவிட்டிருந்தது 
என்னுடைய அறை.
ஒரு சிறு நிம்மதி 
மூடாமல் வைத்திருந்த என் பேனா 
இன்னும் எதோ அதே போக்கில் 
எழுதிக் கொண்டு இருக்கிறது.
                 *****

அழகாக இருந்தது 
பேரூந்து ஜன்னலில் இருந்து 
ஈரம் வழியும் 
கோபுரம் பார்க்கையில்.
துயரமாக இருக்கிறது 
நனைந்தபடியே மயானம் செல்லும் 
நான்கு தோள் நடுவொரு 
முகம் பார்க்கையில்.
                 *****

அத்தனை பெரிய நீல வானம்
சிறியதொரு கருங்குருவி 
எவ்வி எவ்வி எவ்வி 
மேலேறித் திரிந்ததிலா 
மேகம் கருத்துவிட்டது?
இதோ நான் முற்றிலும் நனைய,
முன் ஓடுகிறது 
மழைக் கொப்புளங்கள்  
                 *****

வீட்டிலிருந்து பள்ளிகூடத்திற்கு
நடப்பது போல,
காட்சிகளுக்கும்
கவிதைக்கும் இடையில் 
இந்த மழை நாளில் 
நடந்து கொண்டே இருக்கிறேன்.
இப்போதைக்கு நனைந்தால் 
போதும் எனக்கு 
அப்புறம் யாரிடமேனும் 
கற்றுக் கொள்ளவும் சம்மதம். 
                *****

வெயிலை விடவும் 
வெளிச்சமாக இருக்கிறது 
மழைக்குப் பின் பரவும் 
மஞ்சள் 'ஒளிச்சம்'
                *****

மழைக்கால மரணம் வேறு மாதிரி
மழைக்கால மயானம் வேறுமாதிரி 
மழைக்காலக் கள் மண்டபம் வேறுமாதிரி 
மழைக்கால ஆறு வேறுமாதிரி 
மழைக்காலமே வேறு மாதிரிதான்.
                *****

தூறலைத் துள்ளும் மீன் என 
நினைத்ததோ? 
காலை மழையில்  
பார்வைக் கம்பியில் 
இரண்டு மீன் கொத்திகள்.
நாள் முழுவதும் இனிமேல் ஒரு 
நதி நடந்து வாழும் 
எனக்கு முன்னே.
              *****

பெய்தபடி இருந்த பெருமழை
சொட்டிக்கொண்டு இப்போது.
எப்போதோ வாழ்ந்திருந்த வீட்டின் 
யாருமில்லா புறவாசல் வாழையிலை 
நரம்பு முற்றிய நினைவின் மேல் 
விழுந்து விழுந்து அது தெறிக்கும் 
சத்தத்தில் சரிகிறது என்
நிகழ்காலத்தின் நெடுஞ்சுவர்கள்.
தாழ்ந்து, அசையாத் தவமியற்றும் 
வேம்புக் கிளையமர் ஈரப் பறவை 
சிறகுதறி, பறத்தலுக்குத் தயாராவதை  
பார்க்காமல் இல்லை நான்.
இதோ எழுகிறது என் கோபுரம்
மறுபடியும். 
              *****

மழை 
எங்காவது 
யாரையாவது 
ஏதாவது செய்துகொண்டேதான் 
இருக்கிறது. 
              *****

மீண்டும் மழை பெய்யப் போகிறதாக
மாயம் செய்யும் இந்த இரவுதான் 
என் கடைசி இரவாக இருக்குமோ?
அப்படி நினைத்துக் கொள்ளும்படி 
நிறைவாக இருக்கிறது 
நேற்றைய முதல் மழைக்குப் பிந்திய  
தாழ்வாரப் பூச்சிகளின் 
குழல் விளக்கு மொய்ப்பு.
இத்தனை சிற்றுயிரிகளின் 
கூட்டுப் பரசவத்தில் உண்டாகும் என்
அகால இறப்பு ஒரு பொருட்டில்லை.
என் கடைசி இரவில் மழை பெய்ததா 
என்று தெரியாமல் போகும் 
ஈரமற்ற ஒரே ஒரு பதிலின்மை தவிர. 
                    *****

மழை கூட்டிச் சென்றது. சென்றேன்.
அது காக்கப்பட்ட பகுதி என அறிந்தேனில்லை.
எப்புறமும் மழை நீலம். 
இருபுறமும் தேக்கிய நீர்த் தளும்பல்.
மழை ஏன் சங்கிலிகளை அறுத்தது.
என் உடைகளைக் களைந்தது
என்னைத் துலக்கியது
மழைக் கோட்டு அணிந்த காவலர் வந்து
அதிகாரக் குரலில் விசாரித்தார்.
தேவை இல்லை என சமவெளியால் எறியப்பட்ட 
கூழாங்கல் நான் என்றேன்.
என் குரல் மிகக் குளிர்ந்தும் 
பரிசுத்தமாகவும் இருந்தது.
              *****

வெளியூரிலிருந்து வந்தவுடன் கேட்டேன் 
'நான் ஊரில் இல்லாத போது மழை பெய்ததா?'
'ஒரு சொட்டுக் கூட இல்லை'
உதடு பிதுக்கினார்கள் 
'எனக்கு அப்பிடித் தோன்றிற்று'
அடர்ந்த வருத்தம் என் குரலில்.
சிரிப்பை வெளியே காட்டவில்லை 
பதிலற்ற எதிர்முகங்கள் 
இப்போதும் கூட நினைக்கிறேன் 
'நான் இல்லாத சமயம்
மழை பெய்ய வைக்கும் ஒரு ஊருக்கு 
எப்படியும் நான் போய் விடவேண்டும்' 
                 *****

முந்திய ஊரில் 
மழை பெய்திருக்க வேண்டும்.
நனைந்த அரக்குச் சிவப்புடன் 
நகர்ந்துகொண்டே போகின்றன 
அடைத்த மரக்கதவுக்கு அப்புறம் 
கூட்ஸ் வண்டிப் பெட்டிகள்  
அடுத்து வரப்போகும் 
ஆளற்ற ரயில் கேட்டில் 
கன்றுக் குட்டியுடன் மனச்சணத்தி மரத்தின் கீழ் 
நிலம் அதிர நின்று பார்க்கும் ஒருத்தி வரை 
உலராது இருக்கா வேண்டும் 
ஊர் விட்டு ஊர் செல்லும் மழை.
                  *****

தலை துவட்டவில்லை 
ஒரு நனைந்த 
தாவரம் போல இருக்கிறேன் 
இன்று மாலை 
இங்கே முதல் மழை.
                *****

நான் இன்று ஒரு நாய்க்குடை
குவிந்து கிடக்கும் கட்டுமான ஜல்லிக்குள் 
மலைக்கு ஒதுங்கி நுழையும் 
ஒரு கிழட்டுப் பாம்பு.
மார்புக் காம்பில் 
மழைத்துளி விழ 
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய 
மலையில் நனைந்தசையும்  
இடுகாட்டு இருக்கலம் பூ.
மழை நிரம்பிய சாக்கடை நீரில் 
இழுத்துச் செல்லப்படும் 
காலற்ற பிளாஸ்டிக் பொம்மையின் 
மாறாத முகச்சிரிப்பு.
நான் இன்று நான் அல்ல
மழையின் மாறுவேடம்.
(இதை 25.11.2011 இல் எழுதியிருக்கிறேன். அன்று மழை பெய்திருந்ததா தெரியவில்லை. பெய்திருக்கலாம். ஆனால்  மழையைப் பற்றி எழுதுகிற அன்றைக்கு கட்டாயம் மழை பெய்திருக்க வேண்டிய அவசியமில்லை.)
                 *****

தெருவோரம் உதிர்ந்த 
ஒற்றைத் 
தேக்கு இலையில் 
அடர் மழையின் 
துளி விழுந்து துளிவிழுந்து
துடிக்கிறது
பெரும் வதையில்.
                *****




                











நேர் சிந்தனைகள்

உளவியல் நிபுணர்களால் பெரிதும் சிலாகிக்கப்படும் ஒரு விடயம் நேர் சிந்தனைகள்(positive thinking). வாழ்கையில் நமது எண்ணங்கள் நம்மை வழிநடத்தும், நம்மில் தலையீடு செய்யும் ஒரு காரணியாக காணப்படுகிறது. உளவியல் ரீதியானதும், உணர்வு ரீதியானதும் ஒரு அணுகுமுறையாக நேர் சிந்தனைகள் அமைவதுடன் எமது வாழ்கையின் பிரகாசமான பக்கத்தையும், எதிர்பார்க்கும் நேரான பெறுபேறுகளையும் நோக்கி நம்மை திசை திருப்பவல்லது. இந்த உளவியல் உண்மையானது அநேகமானவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனாலும் இதன் உண்மையான பயன்பாட்டை ஏற்றுக் கொள்பவர்களது எண்ணிக்கை இன்றைய சமூகத்தில் படிப்படியாக அதிகரித்து வருவதாக உளவியலாளர்கள் தெரிவிகின்றனர்.

                   
      

நேர் எண்ணங்களால் ஒரு மகிழ்ச்சியான, சந்தோசமான உணர்வுகளை உணர முடியும் என்பதுடன் நமது கண்களில் பிரகாசமும், அதிகளவான உடல் உள சக்தியும் கிடைக்கும் என்கின்றனர் உளவியல் ஆராய்ச்சியாளர்கள். மகிழ்ச்சி அல்லாத விடையங்களை தவிர்ப்பதையோ அல்லது கவலையான விடயங்களில் இருந்து தற்காலிகமாக தப்பிப்பதற்காக வேறு விடயங்களில் குறிப்பாக இசை, திரைப்படம், வாசிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதையோ குறிப்பதல்ல. மாறாக அச் சூழ்நிலைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளை நம்முள் உருவாக்குவதன் மூலம் முகம் கொடுக்க வேண்டும்.



நேர் சிந்தனைகளை புரிந்து கொள்வதற்கும், நம்மிடையே வளர்த்துக் கொள்வதற்கும் சுய உரையாடல்(self-talk) சிறந்த ஆரம்பம். சுய உரையாடல் அல்லது சுய பேச்சு என்பது எமக்குள் வற்றாத நதி போல முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பேசப்படாத எண்ணங்களை(unspoken thoughts) குறிக்கும். இந்த தன்னிச்சையாக எழும் எண்ணங்கள் நேர்மறையானதாகவோ இல்லை எதிர்மறையானதாகவோ இருக்க முடியும். சில எண்ணங்கள் தர்க்கமானதாகவும்(logical), காரணங்களை கொண்டதாகவும்   இருப்பதுடன் வேறு சில தகவல் குறைபாடுகளினால் எழுந்த தவறான கருத்துருவாக்கங்களாகவும்(misconceptions) காணப்படும். ஓடிக்கொண்டிருக்கும் அநேகமான எண்ணங்கள் எதிர்மறையானவையாக காணப்படுமாயின் வாழ்க்கை தொடர்பான நமது கண்ணோட்டம் நம்பிக்கையற்றதாக(pessimistic) காணப்படுகிறது. மாறாக நேர்மறையாக காணப்படுமாயின் எல்லாம் நன்மைக்கே என்ற அல்லது நன்னம்பிக்கை(optimist) சிந்தனை கொண்டவர்களாக இருப்போம். நம்முள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதாவது சுய ஆய்வு(self study) செய்ய வேண்டியது அவசியம். எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதற்கான காரணங்களை கவனித்து வந்தாலே அவற்றை நேர் சிந்தனைகளாக மாற்ற முடியும். 




நேர் எண்ணங்களை அதிகரிப்பதற்கு நமக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய, மன நிறைவு அல்லது திருப்தியை தரக்கூடிய, நமக்கு பிடித்த ரசனையான விடயங்களில் நேரத்தை செலவழிக்கலாம். எத்தகைய செயற்பாடுகள் மீது நாம் அதிகளவில் ஆர்வமாக இருப்போம் என்பது நமக்கே தெரிந்த ஒன்று. உதாரணமாக இசையை ரசித்தல், புத்தகம் வாசித்தல், பிடித்த நபருடன் நேரத்தை செலவழித்தல், பிடித்த திரைப்படங்களைப் பார்த்தல்.



தங்களுடைய திறமைகள் மீது நேர் அணுகுமுறைகள் உள்ளவர்கள் எளிதில் விரக்தியடைவதில்லை. அவர்கள் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாக தம்மை சுற்றி இருக்கும் மனிதர்களை புரிந்து கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் யதார்த்தத்துடன் செயல்படத் தெரிந்தவர்கள். எந்தவொரு வெளிக் காரணிகளையும் அவர்களை துக்கப்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். 

நோர்த் கரோலினா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான பார்பரா ப்ரெட்ரிக்ஸன் (Barbara Fredrickson) என்பவரால் வெளியிடப்பட்ட ஒரு உளவியல் ஆய்வு அறிக்கையானது நேர் சிந்தனைகள் தொடர்பில் பல ஆச்சரியமான தகவல்களை வழங்கி உள்ளது. அதற்கான சுட்டி இங்கே http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1693418/pdf/15347528.pdf 



"உங்களுடைய எண்ணங்கள் தொடர்ச்சியாக எதிர்மறையானதாக இருக்குமானால் நீங்கள் எதிரான சிந்தனை கொண்டவர்களாக இருப்பீர்கள். தொடர்ச்சியாக உங்களுக்கு வேண்டாத விடயங்களில் கவனம் செலுத்தி அல்லது அவற்றைப் பற்றி அதிகளவில் பேசுவதால் உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் கண்டு கொள்ள மாட்டீர்கள். ஆகவே நீங்கள் எப்போதும் எதிர்மறையான நினைப்புக்களை கொண்டவராக இருந்தால் நேர்மறையான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார் மேரி ஏஞ்சல் என்னும் உளவியல் நிபுணர்.

Tuesday, 4 August 2015

மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமை


சமூகத்தில் முன் வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள் சமூகத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவையாக, சரியானவையாக இருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்வதில் மக்கள் பின் நிற்கின்றார்கள்.





காலம் காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கள், நடைமுறைகள் போன்றவற்றையே தொடர்ந்து பின்பற்ற மனிதர்கள் பழக்கப்பட்டு விடுகிறார்கள். புதிதாக கொண்டுவரப்படும் நடைமுறைகள், சொல்லப்படும் கருத்துக்கள் பயன் மிக்கதாக இருந்தாலும் பழையனவற்றிலிருந்து மாறுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். கருத்துக்களின் உண்மை நிலை, யதார்த்தம் என்பவற்றை புரிந்து கொள்ளாத நிலை அல்லது புரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டாத நிலை, சாத்தியப்பாடு தொடர்பான ஐயம், தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் என்பன  இதற்கு முக்கிய காரணங்களாகக் காணப்படுகிறது. 


சமூகத்தில் மூத்த தலைமுறையினரால் ஏற்கனவே பின்பற்றப்பட்ட நடைமுறைகளை சார்ந்து இருப்பது இலகுவாக இருப்பதாக சில இளம் சமுதாயத்தினர் எண்ணுகின்றனர். இதனால் புதிய எண்ணங்கள் சிந்தனைகளை வரவேற்பதில் ஆர்வமற்ற நிலையை வெளிப்படுத்துகின்றனர். 




ஒரு விடயத்தை வேறுபட்ட அணுகுமுறையுடன் நோக்கும் ஒருவரை சமூகம் எப்போதுமே அலட்சியப்படுத்தும் நிலையே காணப்படுகிறது. இது இன்று மட்டும் இல்லை நாம் வரலாறுகளில் கண்டு கொண்ட உண்மையும் கூட. ஆனால் பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அவற்றை நடைமுறைப்படுத்தி, சாத்தியப்படுத்திய பின்னர் ஏற்றுக்கொள்கின்றனர். 




மேற்கத்தேய நாடுகளில் இந்த நிலைமை முற்றிலுமாக மாறி வருகின்றது. புதிய பல முயற்சிகள், கண்டுபிடிப்புக்கள் அந்த நாடுகளில் அதிகளவில் சாத்தியமாவதும், வெற்றி பெறுவதும் இதனாலேயே. நமது சமூகத்தில் இளம் முயற்சியாளர்களின் வரவு குறைவாக இருப்பதற்கு புதிய அணுகுமுறைகள், புதிய எண்ணங்களிற்கான வரவேற்பு மிகக் குறைவாக இருப்பதே காரணமாகும். முன்னர் இருந்ததை விட ஓரளவு மாற்றம் இருந்தாலும் அது பெருமளவில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானதும், காலத்தின் தேவையுமாகும். 

Tuesday, 30 June 2015

சிறுவயதில் வாசிப்பு

சிறுவயதில் நாம் வாசித்த புத்தகங்கள் அவற்றில் நம்மை அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்கள் இப்போதும் மனதின் எங்கோ ஒரு மூலையில் ஆழப் பதிந்திருக்கும். சிறுவயதில் புத்தகங்கள் நம்மில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு அற்புதமான கனவு உலகில் இருப்பதைப் போன்றது. அந்த உலகத்தில் பறப்பது, சுற்றித் திரிவது என்பன அந்த வயதில் அலாதியான ஒன்று.

பாடப் புத்தகம் படிப்பதில் இருந்த ஆர்வத்தை விட ராணி காமிக்ஸ், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் போன்றவற்றை வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அம்மாவுடன் நகர்ப்புறம் போகும் போதெல்லாம் இவற்றில் எதோ ஒன்றை வாங்கி விடுவேன்.


ராணி காமிக்ஸ் புத்தகங்களில் மாயாவி கதாபாத்திரம், அதன் சாகசங்கள் புத்தகம் படித்து முடித்த பிறகும் மனம் முழுவதும் நிறைந்து அடுத்த புத்தகத்தை படிப்பதற்கான ஆவலை இன்னும் தூண்டிக்கொண்டே இருக்கும். இலத்திரனியல் சாதனங்கள் எதனுடைய தொந்தரவும் இன்றி மாயாவியின் மாய உலகத்தில் சஞ்சரித்த அந்த நாட்கள் அழகானவை.


அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் போன்ற புத்தகங்களில் வரும் அரச கதைகள், கதாபாத்திரங்கள் என்வற்றின் மூலம் அரச கதைகள், பழைய வரலாறுகள் என்பவற்றை தேடிப் படிப்பதற்கு தீவிர ஆர்வம் ஏற்பட்டது. அந்தக்காலத்து மனிதர்களின் பழக்கவழக்கங்கள், நடை உடை பாவனைகள் என்பன அழகான ஓவியங்களாக தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்களின் ஈர்ப்பு கதைகளை படிக்கும் போது நம்மை பழைய காலத்தில் சஞ்சரிக்க வைக்கும் வல்லமை மிக்கவை.




சிறுவயதின் பசுமையான அந்த வாசிப்பனுபவங்களை இன்று நினைத்தாலும் கூட இனம்புரியாத சிலிர்ப்பும், இன்பமும் மனதில் தோன்றி விடுகின்றன. 

நான் ரசித்த பாரதி

என்னுடைய உணர்வுகளில் ஊறிப்போன ஒரு பெயர் தான் பாரதியார். தமிழின் கவிதை மற்றும் உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். சமூகம், நாடு, மக்கள் என பரந்துபட்ட அளவில் தூர நோக்கோடு கருத்துக்களை கூறிச்சென்ற அறிஞர். பாரதியின் பாடல்கள், கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகள் தட்டி எழுப்பப்பட்டு புதுவித உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு வேறு யாருடைய எழுத்துக்களிலும் கிடைத்ததில்லை. ஒவ்வொரு எழுத்துக்களின் ஆழத்திற்கும் சென்று அதனை உணர்ந்து படித்தவர்கள் இதே அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். 

பாரதியின் பாடல்கள் இலக்கியக் கருத்துக்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்தால் வாழ்க்கையையும், அதில் மனிதவர்க்கம் முழுவதும் உயர்நிலை அடைந்து வாழ்வதையும், அதற்காக எதிர்பார்க்கும் மாற்றங்களையும் பெரும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றார் என்பதனை தெளிவாக காண முடியும். பாரதியின் எழுத்துக்களை ஆழமாக சிலாகிக்கும் அளவிற்கு இலக்கிய அறிவு இல்லை என்றாலும் நான் ரசித்தவற்றில் ஒரு சிலவற்றை இங்கு பகிந்து கொள்கிறேன்.

"மண் பயனுற வேண்டும் 
வானகம் இங்கு தென்பட வேண்டும்" சொர்க்கம் இந்த பூமியில் தோன்ற வேண்டும் என்பார். 

தமிழைப் பற்றி பாரதி கூறியவற்றில் சில 
"தமிழ், தமிழ், தமிழ் என்றும் எப்பொதும் தமிழை வளர்ப்பதையே கடமையாக கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போக வேண்டும். தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொது எனக்கு வருத்தமுண்டாகிறது" என்கிறார்.

அதே வேளை பாரதி தமிழ் மொழி பற்றி சில கடுமையான கருத்துக்களையும் கூட வெளியிட்டிருப்பார். ஆனால் அவற்றை யாரும் சிலாகித்து பேசியது குறைவே. "தமிழில் எழுத்துக்குறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும், "தமிழ்ப் பாசைக்கு உள்ள குறைகள்" என்ற தலைப்பில் இன்னுமொரு உரையாடல் கட்டுரையையும் அவர் எழுதி இருப்பார்.

"உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதி பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்" என்று கூறுவார்.

அவர் தனது பாடல்களில் மொழியை கையாளும் லாவகம் அழகானது. "காணி நிலம் வேண்டும் பராசக்தி" பாடலில்

"கத்துங் குயிலோசை - சற்றே வந்து 
காதிற் படவேண்டும்" என்பார். கத்துவது என்றால் கூவி அழைப்பது என்று பொருள். தூரத்தில் இருப்பவர்களை அழைப்பதற்கான சொல் கத்துவது தான். கத்தி குயில் தன் காதலை அழைக்கும் சத்தம் தன் காதில் பட வேண்டும் என்கிறார் .

அதே போல "பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு 
பத்தினிப் பெண்வேணும்" தன் மீது மட்டுமே தணியாத காதல் கொண்ட இணக்கமான பெண். இருவரும் ஒரே ரசனையில் ஓர் உணர்வில் கூடும் போது தான் பாட்டுக் கலந்திட முடியும்.

"கூட்டுக்களியினிலே கவிதைகள் கொண்டுதர வேணும்" ஒத்துப் போனவர்களின் இன்ப விளையாட்டு அது தரும் பல்லாயிரம் கவிதைகளை.

"பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்" இந்த உலகத்தையே சுபீட்சமாக்கும் எழுத்துக்களை நான் வழங்க வேண்டும் என்கிறார்.

கண்ணம்மாவின் காதல் என்ற பாடலில்

"கற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன் 
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு 
தூற்றினை ஒத்த இதழ்களும் - நிலா 
ஊறித் ததும்பும் விழிகளும்...."

என்று ஆரம்பிக்கும் பாரதி மூச்சு விடும் இடைவெளி நேரத்தில் கூட உன் மீதான காதலை எண்ணி இன்பம் கொள்கிறேன் என்கிறார். அமுது ஊறுகின்ற இதழ்கள் - இதழ் சுவை இனிதானது. இதைப் பாடாத கவிஞர்களே இல்லை. நிலா ஊறித் ததும்பும் விழிகள் - கண்ணம்மாவின் விழிகள் காருண்யம் மிக்கவை. அதில் அன்பு மிகுதியால் நீர் பளபளத்துக் கொண்டே இருக்கும். பார்க்கும் போதே அவளுள் ஒன்றிட வைக்கும் விழிகள் என்று சொல்கிறார்.

அதே பாடலில் "நீ எனது இன்னுயிர் கண்ணம்மா.." என்கிறார் பாரதி. அதுவும் இன்னுயிர் என்கிறார். அமுது ஊறும் வரிகள். காதலின் உச்சத்தில் கவிஞன் வார்த்தைக்கு தவித்து உயிரை விட மேலான ஒன்று இருக்க முடியாததால் கண்ணம்மாவை தன் உயிராக்கி விடுகிறார்.

கடைசி வரிகளில் பாரதி "உயிர்த் தீயினிலே வளர் சோதியே.." என்று காதலின் உன்மத்த நிலையை வர்ணிக்கின்றார். 

அதே போல பாரதி பாடிய சக்திப் பாடல்கள் காலத்தால் அழியாதவை. சக்தியின் புகழை, பெருமையைப் பேசுபவை. "மூன்று காதல்" என்ற தலைப்பின் கீழே

"வெள்ளை மலரணை மேல்-அவள்
வீணையுங் கையும் விரிந்த முகமலர் 
விள்ளும் பொருளமுதும் - கண்டேன் 
வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா"

எனத் தொடங்கும் ஒரு பாடலைப் பாடியிருக்கின்றார் பாரதியார். முதலாவது சரஸ்வதி காதல், இரண்டாவது பாடல் லக்ஷ்மி காதல், மூன்றாவது காளி காதலையும் குறிக்கின்றது. இந்த மூன்று விதமான காதல் பாட்டுக்களையும் ஆழமாக நோக்கினால் பாரதியின் வாழ்வு எப்படிப் பண்பட்டு எதிலே போய் முடிகின்றது என்பதை காண முடியும்.

"கண்ணம்மா என் காதலி" என்ற பாடல்களில் பண்டைய தமிழிலக்கிய அகத்துறை மரபு சார்ந்ததாக காட்சி வியப்பு, பின்னே வந்து கண் மறைத்தல், முகத்திரை களைதல், நானிக்கன் புதைத்தல், குறிப்பிடம் தவறியது, யோகம் என்னும் தலைப்புக்களில் பாடல்களை அமைத்திருக்கின்றார்.

கண்ணன் பாட்டுக்களில் கண்ணனை காதலனாக உருவகித்து பாடும் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு அற்புதமானவையாக இருக்கும்.
அதில்
"தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே 
சுடர் விளக்கினைப்போல்..." எனத் தொடங்கும் பாடலில் காதல் வயப்படிருக்கும் பெண் தனது உணர்வுகளை தோழிக்கு உரைப்பது போல வரிகள் அனைத்தும் அருமையாக அமைந்திருக்கும். எப்போது படித்தாலும் உதட்டில் மென் புன்னகையை வரவழைப்பவை அவை. 

Tuesday, 23 June 2015

நின்னருகில்தானே....

உரசாமல் நீ சொல்லும் காதலை
உரசலில்லாமல் நான் உணரும் தருணம் - நம்
உயிர்கள் மட்டும் உரசிச்சென்றது

கற்றதும் வந்துவிடும்
இலக்கணத் தமிழ் போல - நீ
உற்றதாய் உணர்ந்ததும் - உன்
நினைவுகள் வந்து என் உள்ளம் வருடும்

உன்னிடம் வரும் போது
பேச நினைக்கும் வார்த்தைகளை
என் மனம்
ஆசையாய் அசை போட்டபடி
வந்தாலும்
உன் கரம் பற்றியதும்
கடவுளிடம் வேண்டுதல்கள் ஏதுமில்லா
தீவிர பக்தனைப் போல்
வெகுளியாய் என் வார்த்தைகள்
ஒதுங்கிப் போகின்றன

பற்றிய கரம் தனை விட்டதும் தவித்து
கற்ற மொழியும் கரைந்து
வெற்று நிலையில் - மனம்
அற்றுப் போகையில்
தலைமீது உன் கரம்
உணர்வேன்

நிலைத்து விடுவாயென
நினைவில் இருத்தியே
பேசக் கூடாமல்
ஊனம் நேர்ந்தது போல்
நேசப் பார்வை காட்டுவாய்
என்னுயிர் உனதாகியதை
அறிந்தேன்

உடைந்து செல்லும்
மண் துகளாய் மாறிடினும்
அடைந்து நிற்பேன் - என்றும்
நின்னருகில் தானே!